கோவையை தலைமையிடமாகக் கொண்டு டி மேக்ஸ் (D Max) சொல்யூஷன் என்ற பெயரில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக செயல்பட்டுவருகிறது. இதை காரமடை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், மேட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலு ஆகியோர் நடத்திவருகின்றனர்.
இந்த நிறுவனமானது தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ. 400 கோடிக்கு மேல் பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த நிறுவனத்தில் பணத்தை கட்டி ஏமாந்த 20க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு பிரிவில் புகார் அளித்துள்ளனர்.
அப்போது முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறினர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் ஒவ்வொருவரும் 5 முதல் 10 நபர்களை இணைத்திட வேண்டும் என்று செந்தில்குமார் என்பவர் கூறியதாக குற்றம்சாட்டினர்.
மேலும் கடந்த ஒரு மாத காலமாக செந்தில்குமார் செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகியதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறினர். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.