கோயம்புத்தூர்: 108 ஆம்புலன்ஸில் இருந்து கரோனா தொற்று நோயாளியை இறக்கிய சற்று நேரத்தில் அதிலிருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டம், இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கரோனா தொற்று நோயாளி ஒருவர், 108 ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் உதவியுடன் மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, உடனடியாக ஆம்புலன்சில் இருந்த நோயாளியை கரோனா சிகிச்சைப் பிரிவுக்கு செவிலியர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் ஆம்புலன்சில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் திடீரென வெடித்ததில் ஆம்புலன்ஸ் தீப்பற்றியது. தீ மளமளவென ஆம்புலன்ஸ் முழுவதும் பரவத் தொடங்கி கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அங்கு சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளிகள் பலர் அச்சமடைந்தனர். நல்வாய்ப்பாக ஆம்புலன்ஸ் அருகில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
உடனே தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் ஆம்புலன்ஸ் மீது தண்ணீரை அடித்து சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், ஆக்ஸிஜன் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவ்விபத்து குறித்து பந்தய சாலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தீவிரவாத அமைப்போடு தொடர்புடைய கொள்ளையர் கைது!