ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இந்த மலைப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் வரலாறு காணாத விலை உயர்வை தொட்டதால் விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ளனர். 3 மாத கால பயிரான சின்ன வெங்காயம் தற்போது அறுவடைக்கு தயாராகியுள்ளது.
விவசாய கூலித்தொழிலாளர்களை கொண்டு அறுவடை செய்யப்பட்டு வெங்காயத்தை மூட்டைகளில் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அறுவடைப்பணிகள் தொடங்கியுள்ளதால் வெங்காய வியாபாரிகள் தாளவாடி பகுதியில் முகாமிட்டு வெங்காயத்தை விலை பேசி கொள்முதல் செய்து விற்பனைக்கு அனுப்பும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தற்போது விவசாயிகளிடமிருந்து சின்ன வெங்காயம் கிலோ 50 ரூபாய் முதல் 60 வரை விலை பேசி வாங்கி செல்கின்றனர். வெங்காயம் அறுவடைப் பணி தொடங்கியுள்ளதால் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: