கோவை சிவானந்தா காலனி பகுதியில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிங்காநல்லூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக், பொங்கலூர் ந.பழனிச்சாமி, திமுக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்டோர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சிங்காநல்லூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நா. கார்த்திக், "மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த மசோதாவானது இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் செயல். இந்துக்கள், இஸ்லாமியர்களை பிரிக்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டமானது இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமல்ல ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் உள்ளது" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த சட்டத்திற்கு அதிமுக அரசு ஆதரவளிப்பது ஈழத் தமிழர்கள் மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும், எனவே இதை கண்டித்து திமுக தலைவர் உத்தரவின்பேரில் இந்த போராட்டம் நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார். மேலும் வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் நடத்தும் கருப்புக்கொடி போராட்டத்திற்கு ஆதரவளிப்போம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க:
கேரளாவில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக பந்த் - பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!