கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேட்டுப்பாளையம், கல்லாறு, பர்லியார், குன்னூர் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 9ஆம் தேதி இரவு பெய்த மழை காரணமாக, மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் கல்லாறு ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
இதனால், ரயில் பாதை மூடிய நிலையில் காணப்பட்டது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை கடந்த 10, 11, 12, 13ஆகிய நான்கு நாள்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து ரயில்வே தொழிலாளர்கள் ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர்.
மீண்டும் தொடங்கிய மலை ரயில்
ரயில் பாதையைச் சீரமைக்கும் பணி நேற்று (அக்.13) முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் சேவை இன்று (அக்.14) காலை முதல் தொடங்கப்பட்டது.
மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் காலை முதலே மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர்.
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வழக்கம்போல் காலை 7:10 மணிக்கு 180 சுற்றுலாப் பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டுச் சென்றது.
ரத்து செய்யப்பட்ட மலை ரயில் மீண்டும் தொடங்கியதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் மலை ரயிலில் பயணம் செய்தனர்.
இதையும் படிங்க: குன்னூர் மலை ரயில் பாதையில் ராட்சதப் பாறை: உணவு, தண்ணீர் இன்றி சுற்றுலாப் பயணிகள் அவதி!