கோவையில் பாரதியார் பல்கலைக்கழகம் நடத்துவதற்காக எம்ஜிஆர் காலத்தில் விவசாயிகளிடம் இருந்து 1000 ஏக்கர் நிலம் பெறப்பட்டது.
அப்போது அரசு வழங்குவதாகக் கூறபட்டிருந்த விலை குறைவாக உள்ளது என்றும் அதனை உயர்த்தி தர வலியுறுத்தியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு விவசாயிகள் கேட்டுகொண்ட விலையில் ஒரு பாதியை ஏற்றுக்கொண்டு கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் அதை அமல்படுத்தாமல் தமிழ்நாடு அரசாங்கம் மேல் முறையீடு செய்து விசாரணை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்தும் உடனடியாக விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தை வழங்கக் கோரியும் விவசாயிகளுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தியும் மக்களவை உறுப்பினர் பி.ஆர் நடராஜன் தலைமையில் பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு மாநில அரசிற்கு எதிராகவும் பாரதியார் பல்கலைக்கழகத்தைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.நடராஜன் எம்பி, 'விவசாயிகளுக்கு சேரவேண்டிய பணத்தை உடனடியாகத் தர வேண்டும். எம்ஜிஆர் உறுதியளித்தபடி நிலம் அளித்த விவசாயிகளின் வீட்டிற்கு ஒருவருக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
இல்லையென்றால் ஜனவரி மாதம் பொங்கல் முடிந்தவுடன் ஆடுமாடுகளுடன் உள்ளே வருவோம். மேய்போம், குடியிருப்போம். எனவே உடனடியாக நீதிமன்ற தீர்ப்பை தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட நோயாளி: மருத்துவ கல்வி இயக்குநர் பதிலளிக்க உத்தரவு