கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் தந்தை பெரியார் வீதியை சேர்ந்தவர் சக்திவேல். லாரி பெயிண்டராக உள்ளார். இவரது மனைவி சங்குவதி. இவர்களது மகள் கவிதா. கவிதாவின் மகள் சாதனா என்கிற ரித்திகா மேட்டுப்பாளையத்திலுள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
சக்திவேல் வழக்கம்போல் வேலைக்குச் சென்றபோது சங்குவதி துணி துவைப்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டார். அப்போது, அவரது மகள் கவிதா, பேத்தி சாதனா இருவரும் உடன் சென்றிருந்தனர்.
வெள்ளத்தில் சிக்கிய மூவர்
வீட்டில் இருந்து புறப்பட்ட அவர்கள் மேட்டுப்பாளையம் உப்பும்பள்ளம் பகுதியிலுள்ள பவானி ஆற்றுக்குச் சென்று துணிகளை துவைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனை சற்றும் எதிர்பாராத மூன்று பேரும் அதிர்ச்சியடைந்து கரைக்கு வருவதற்குள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ளத்தில் சிக்கி மூவரும் அடித்துச் செல்லப்பட்டனர்.
உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி சாதனாவை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் துறை, தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தாய், மகள் உடல் மீட்பு
பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினரும், தீயணைப்பு வீரர்களும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தாய், மகள் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சங்குவதி, கவிதாவின் உடல்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
இதையும் படிங்க: மரக்கட்டையை பற்றியபடி மிதந்த பெண்: 16 மணிநேரம் கழித்து உயிருடன் மீட்பு!