கோவையில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை கரும்புக்கடைப் பகுதியில் உள்ள ஜமாஅத்தே இஸ்லாமிய ஹிந்த் அமைப்பிற்குச் சொந்தமான பள்ளி வாசல் ஒன்று, கரோனா சேவை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சேவை மையத்தைத் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்கள், விளம்பரப் பலகை, சமூக வலைத்தளங்கள் மூலமாக பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு கோவையில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் நிலவரம் குறித்து தெரிந்து கொள்ளலாம். ஆதரவற்றோர் யாரேனும் இந்த சேவை மையத்தை தொடர்பு கொண்டால், இலவச ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுப்பார்கள். இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், அனைத்து மதத்தினரும் பள்ளி வாசலில் அமைக்கப்பட்டுள்ள இந்த சேவை மையத்தை பயன்படுத்திவருகின்றனர்.
மேலும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உணவு கிடைக்காமல் சிரமப்படுவோரையும் கண்டறிந்து இரண்டு வேளை உணவுகளையும் ஜமாஅத்தே இஸ்லாமிய ஹிந்த் அமைப்பினர் வழங்கி வருகின்றனர்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மன உளைச்சலில் இருந்தால், அவர்கள் அதிலிருந்து மீண்டுவர மன தத்துவ மருத்துவர்கள் மூலம் ஆலோசனையும் வழங்கப்படுகின்றது. பள்ளி வாசலில் மதப்பாகுபாடின்றி அனைவரும் வந்து ஆலோசனை மையத்தை பயன்படுத்தி வருவது பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: 'அண்ணாந்து பார்க்க வைத்த கல்யாணம்' - விமானத்திற்குள் டும்.. டும்.. சத்தம்