கடந்த டிசம்பர் 25ஆம் தேதி கேரள மாநிலத் தொழில் அதிபர் அப்துல் சலாம் கோவை வந்து சென்றுகொண்டிருக்கும்பொழுது நவக்கரை மாரியம்மன் கோயில் அருகே அவரது காரை வழிமறித்த கும்பல், காரையும் அவர் வைத்திருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து அப்துல் சலாம் க.க. சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
மாநகரக் காவல் கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவின்பேரில் மூன்று தனிப்படைப் பிரிவுகளை அமைத்து இந்த வழக்கை விசாரித்துவந்தனர்.
விசாரணையில் 26 டிசம்பர் அன்று அப்துல் இடமிருந்து கடத்திச்செல்லப்பட்ட கார் பேரூர் சிறுவாணி சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதனுள்ளிருந்து 90 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்செய்யப்பட்டது. இது குறித்து அடுத்தகட்ட விசாரணையை மேற்கொண்டுவந்த காவல் துறையினர் இன்று பகல் 12 மணி அளவில் இவ்வழக்கில் தொடர்புடைய உன்னி குமார் என்கின்ற ராஜுவை (44) கோவை குறிச்சி பகுதியில் கைதுசெய்தனர்.
அவரிடமிருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயைக் கைப்பற்றினர். உன்னி குமார் அளித்த தகவலின்பேரில் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஸ்ரீஜித் என்பவரை இன்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் தனிப்படையினர் கைதுசெய்தனர்.
இதனைத் தொடர்ந்து, கேரள மாநிலம் முண்டூரைச் சேர்ந்த சந்தோஷ் (34), சுபின் (29), சந்தீப் (32), பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (47) ஆகிய நான்கு பேரை இன்று கைதுசெய்தனர்.
சந்தோஷிடமிருந்து மூன்று லட்சத்து 27 ஆயிரம் ரூபாயும், சுபின் இடமிருந்து TATA ZEST காரையும், சந்தீப்பிடமிருந்து INNOVA காரையும் (KL09X1009), ராதாகிருஷ்ணனிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணம், BOLERO PICKUO வாகனத்தையும் (KL09AG6236) காவல் துறையினர் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் அனைவரையும் கோவை டாமஸ்டிக் வயலேன்ஸ் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் முன்னிறுத்தியதில் நீதிபதி திலகேஸ்வரி குற்றவாளிகள் அனைவருக்கும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.