கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தலைமையில் மழை மற்றும் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் இராசாமணி, துணை ஆட்சியர் ரவிக்குமார், மாநகராட்சி ஆணையர் ஸ்வரன் குமார், காவல் ஆணையர் சுமித் சரண், கோவை மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காலையில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு இந்த கூட்டமானது நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் வேலுமணி, கடும் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த மழைநீரானது வீணாகமால் சேகரிக்கப்பட வேண்டும் என்றார்.
இது குறித்து அதிகாரிகள் வீடுவீடாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும், பணியை சரிவர செய்யாவிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கைவிடுத்தார். மேலும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகளின் செயல்பாடு இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.