கோவை : கோவை சாய்பாபா காலனி பகுதியில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடுவாழ் நலத்துறை அமைச்சர் மஸ்தான், பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் இருந்து அனுமதி இல்லாமல் 17 பேர் தமிழகம் வந்துள்ளனர், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
ஒன்றிய அரசின் முடிவை பொறுத்தே, தமிழக அரசு இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் நலன் குறித்து சரியான முடிவெடுக்கும் என்றும் தெரிவித்தார்.
உக்ரைனில் இருந்து இதுவரை 1,980 மாணவர்கள் தமிழக அரசு மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும், சிலர் தாமாக வந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார். உக்ரைனில் இருந்து தமிழகம் வந்த மாணவர்களுக்கு, மேற்கொண்டு அவர்களது படிப்பை தொடர மத்திய மாநில அரசுகளுடன் இணைந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். உலகில் எந்த பகுதியில் தமிழர்கள் இருந்தாலும், அவர்களது நலன் காக்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார்.