கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் மெகா தடுப்பூசி முகாமினை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.
செப்டம்பர் 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அன்று ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், 20 லட்சத்துக்கும் அதிகமானோர் அன்று தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். அதன்படி, 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் தமிழ்நாட்டில் 20ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 18 வயதிற்கு மேற்பட்ட 29 லட்சத்து 27 ஆயிரத்து 149 இளைஞர்களில், இதுவரை 22 லட்சத்து 4 ஆயிரத்து 631 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 38 மாவட்டங்களில், முதல் தவணை மற்றும் 2ஆம் தவணை தடுப்பூசி போடப்பட்டதில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.
ஆனால், தொற்று எண்ணிக்கையை பொறுத்த வரை அதிகரித்து வருகிறது. அருகே கேரள எல்லைப் பகுதி உள்ளதால், தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அலுவலர்கள் தெரிவித்தனர். எனவே, எல்லைப் பகுதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
மேலும், “கோவை மாவட்டத்தை பொறுத்த வரை மாநகராட்சி பகுதியில் 266 தடுப்பூசி முகாம்களும், ஊரக பகுதியில் 440 முகாம்களும் என மாவட்டம் முழுவதும் 706 தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. மலை பகுதி மற்றும் கிராமப்புற பகுதி, கேரள மாநில எல்லைப் பகுதியில் உள்ள முகாம்களில் அதிகளவில் தடுப்பூசி செலுத்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
முன்னதாக, தடுப்பூசி முகாம் தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம், புறநகர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டாக்டர்.வரதராஜன், மாநில விவசாய அணி துணைத்தலைவர் தமிழ்மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கரோனா பரவல்: அடுத்த 3 மாதங்கள் முக்கியமானவை என எச்சரிக்கை