கோயம்புத்தூர்: அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில், தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, கரோனா தொற்று காலத்தில் தனியார் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த அன்பில் மகேஷ், "தனியார் பள்ளி நிர்வாகிகள், கரோனா தொற்று காலத்தில் பள்ளிகள் நடத்துவதில் உள்ள சிக்கல்களைத் தெரிவித்துள்ளனர். இந்தக் காலகட்டத்தில் கல்வியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்றால் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மேலும் கல்வித் துறை நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து செயல்பட வேண்டும்.
மேலும் 6, 8ஆம் வகுப்புகள் திறக்க இன்னும் முடிவுகள் எடுக்கப்படவில்லை, இது குறித்து மேலும் ஆலோசனை எடுக்கப்பட வேண்டும். கோயம்புத்தூர் மாவட்ட தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை 1ஆம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்க வேண்டும் என்றும், மாணவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.
இருப்பினும் பெற்றோர்களிடையே பயம் இருக்கத்தான் செய்கின்றது. பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு கரோனா தொற்று இருந்தால் அதனை வெளியில் தெரிவிக்காமல் இருப்பது தவறுதான். அவர்கள் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வில் வயது வரம்பு உயர்த்தப்படுவது குறித்து பரிசீலனை செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சுழற்சி முறையில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம்