கோயம்புத்தூர்: கருமத்தம்பட்டி நகராட்சியின் முதல் நகர்மன்றக் கூட்டம் தலைவர் நித்யா மனோகரன் தலைமையில் இன்று(மார்ச்.21) நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணைத் தலைவர் யுவராஜ் உட்பட 22 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் முதல் தீர்மானமாக கருமத்தம்பட்டி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தியதற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கருமத்தம்பட்டி நகராட்சிப் பகுதியில் குடிநீர் வசதி, சாலை வசதி ஏற்படுத்த நிதி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நகராட்சித் தலைவர் நித்யா மனோகரன்,
கடந்த அதிமுக ஆட்சியில் கருமத்தம்பட்டி பேரூராட்சியாக இருந்தபோது கட்டட வரைபட அனுமதி வழங்குவதில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், வணிக வளாகம் வாடகைக்கு விடப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாகவும் தெரிவித்த அவர் மக்கள் குறைகள் கேட்கப்பட்டு உடனடியாக தீர்க்கப்படும் எனவும், தெரிவித்தார்.
இதனிடையே நகர்மன்றக் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது காங்கிரஸ் கட்சியின் புறநகர் மாவட்டத் தலைவர் விஎம்.சி மனோகரன் தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய தலைவர் பதவியை திமுக கைப்பற்றியதற்கு எதிர்ப்புத்தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிக்கையை ஏற்று, திமுக நகர மன்றத் தலைவர் பதவி விலகி காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் பதவியை ஒதுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: 'அப்போலோ சிசிடிவி கேமராக்களை நான் அகற்ற சொல்லவில்லை'- ஓபிஎஸ் வாக்குமூலம்