முருகனின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் திருவிழா. முருகனின் ஆறுபடை வீடுகளிலும் இந்த தைப்பூச திருவிழாவானது உற்சாகமாக முருக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அரக்கர்களை அழிக்க முருகப் பெருமானுக்கு பார்வதிதேவி வேலினை இன்றைய தினத்தில் கையில் கொடுத்தார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்த திருவிழாவானது தீமைகளை அகற்றி நன்மைகளை கொடுக்கும் என்பது முருக பக்தர்களின் நம்பிக்கை.
இந்நிலையில் முருகப்பெருமானின் ஏழாவது படை வீடு என்று அழைக்கப்படும் மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக் கோயிலில் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை திருக்கல்யாணமும் அதனைத் தொடர்ந்து தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் நடைபெற்றது.
தைப்பூசத்தை ஒட்டி கோவை திருப்பூர் ஈரோடு மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்து பாத யாத்திரையாக வந்தும், அலகு குத்தியும், பால் காவடி ,பன்னீர் காவடி சுமந்தும் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற நேர்த்திக்கடன் செலுத்தினர்.