தமிழ்நாடு - கேரள எல்லையில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் நடமாட்டம் இருப்பதை அறிந்து, தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை காவல் துறையினரும்; கேரள சிறப்பு அதிரடிப் படை காவல் துறையினரும் இணைந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் அட்டப்பாடி வனப்பகுதியில் கேரள மாநில சிறப்பு அதிரடிப் படையினர், மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த மணிவாசகம், ரமா, அரவிந்த், சுரேஷ் ஆகியோரை சுட்டுக் கொன்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த தீபக், ஸ்ரீமதி ஆகியோர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனிடையே துப்பாக்கிக் குண்டு காயத்துடன் தப்பிச்சென்ற தீபக், மற்ற மாவோயிஸ்ட்களின் உதவியோடு ஆனைகட்டி அருகே உள்ள வனப்பகுதியை அடைந்தார்.
இந்த தகவலறிந்த நக்சல் தடுப்புப் பிரிவினரும் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து இன்று காலை 'முழக்கன்கல்' வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மாவோயிஸ்ட் தீபக் பிடிபட்டார். அவருக்கு உதவியாக இருந்த மாவோயிஸ்ட் மூவர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதனையடுத்து தீபக்கை கைது செய்த தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படை காவல் துறையினர், அவரை வீரபாண்டி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். பின்னர் அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற தீபக், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அப்போது மாவோயிஸ்ட் தீபக் 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்று முழக்கம் எழுப்பியவாறு மருத்துவமனைக்குச் சென்றார்.
இதையும் படியுங்க :
அயோத்தி தீர்ப்பை அனைவரும் சமமாக ஏற்க வேண்டும் - மு.க. ஸ்டாலின்!