கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை ஆதரித்து மார்ச் 23ஆம் தேதி பட்டிமன்ற புகழ் லியோனி குனியமுத்தூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். தொலைக்காட்சி பட்டிமன்றங்களில் இயல்பாகவே நகைச்சுவை உணர்வுடன் எதிர்க்கட்சியினரை விமர்சிக்கும் ஐ.லியோனி திமுக பேச்சாளர்களில் முக்கியமான ஒருவர் ஆவார்
பரப்புரையின் போது பேசிய அவர், "வெளிநாட்டு மாடுகளின் பாலைக் குடித்து குடித்து நம் ஊர் பெண்களும் அவர்களது குழந்தைகளும் பலூன் போல் ஊதிவிட்டனர். ஒரு காலத்தில் பெண்களின் இடுப்பு எட்டுப் போல் இருந்தது. குழந்தைகளைத் தூக்கி இடுப்பில் வைத்தால் அவர்கள் கச்சிதமாக அமர்வார்கள்.
ஆனால், தற்போது பெண்களின் இடுப்பு பேரல் போல் ஆகிவிட்டது. குழந்தைகளை இடுப்பில் வைத்தால், அவர்கள் வழுக்கி விழுகின்றனர்" என்று கூறினார்.
இது பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தியது. தற்போது அவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து சர்ச்சை எழுந்துள்ளது.