கோவை ம.ந.க வீதியைச் சேர்ந்த 70 வயதுடைய மூதாட்டி ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக, வெரைட்டிஹால் சாலை காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையிலான காவல் துறையினர் சாதாரண உயிரிழப்பு என்னும் பிரிவில் வழக்குப்பதிவு, செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மூதாட்டியின் உடலை உடற்கூறாய்வு செய்ததில், அவர் கொல்லப்பட்டது தெரிய வந்தது.
ஆனால், காவல் ஆய்வாளர் செந்தில் குமார் அந்த வழக்கு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதுதொடர்பான தகவல் மாநகரச் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணனுக்குத் தெரிய வந்தது. அவர் விசாரணைக்கு உத்தரவிட்டதின் பேரில், இந்தச் சம்பவம் தொடர்பாக, காவல் துறை அலுவலர்கள் விசாரித்து, அந்த அறிக்கையை துணை ஆணையரிடம் ஒப்படைத்தனர்.
அதில், கொலை வழக்கை ஆய்வாளர் செந்தில் குமார் முறையாக விசாரிக்காதது உறுதி செய்யப்பட்டதால், அவரைப் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடுமாறு, மாநகர காவல் ஆணையருக்கு, துணை ஆணையர் பரிந்துரை செய்தார். அதன்பேரில் நேற்று மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் , செந்தில் குமாரை பணியிடை நீக்கம் செய்தார்.
இதையும் படிங்க: