கோவை: தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியான செமனாம்பதி அருகே உள்ள இரட்டைமடை தோட்டம் பகுதியில், கேரளாவைச் சேர்ந்த சஞ்சய் ஆண்டனி என்பவருக்குச் சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலம் உள்ளது.
இவரது தோட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக இரவு நேரங்களில் கேரளாவிலிருந்து கொண்டுவரப்படும் மருத்துவக் கழிவுகள் பெரிய அளவிலான குழிகளுக்குள் போட்டு மூடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று (ஏப்.07) இரவு அதிக அளவில் லாரிகள் கேரளாவிலிருந்து தமிழ்நாடு எல்லைக்கு வந்ததால் அப்பகுதி உழவர்கள் சந்தேகமடைந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சஞ்சய் ஆண்டனிக்கு தோட்டத்திற்கு மூன்று டிப்பர் லாரி மூலம் கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவு, நகராட்சிக் கழிவுகள் கொண்டுவரப்பட்டு கொட்டப்பட்டது தெரிய வந்தது.
இதனைப் பார்த்த உழவர்கள் மூன்று டிப்பர் லாரிகளையும், குழி தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரத்தையும் சிறைப்பிடித்தனர். அப்போது ஓட்டுநர் உள்பட 10 பேர் தப்பி ஓடினர்.
இதையடுத்து அப்பகுதி உழவர்கள் வருவாய்த்துறை அலுவலர்களுக்கும், ஆனைமலை காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர். இதனடிப்படையில் நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் அவை திருச்சூர் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட கழிவுகள் என்பது தெரியவந்துள்ளது.