கரோனா பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்களுக்கு போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தி தரவில்லை என்று கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் இணைய இதழான சிம்பிளி சிட்டியில் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் இருவர் நேற்று (ஏப்ரல் 23) கைது செய்யப்பட்டனர். பிறகு அவர்களை விடுதலை செய்த காவல் துறையினர், அந்த இணைய இதழின் பதிப்பாசிரியர் ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியனை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஊடகதுறையினர் விளக்கம் கேட்டதற்கு அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று காவல்துறையிடம் கூறினர். இதற்கு கோவை ஊடகத்துறை கடும் கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், காவல்துறையினரின் அடக்குமுறையை கண்டிக்கும் வகையில் கோவை ஊடக நண்பர்கள் அனைவரும் இணைந்து முகக் கவசத்தில் பூட்டு சின்னத்தை பதித்து தங்களது எதிப்பை தெரிவித்தனர். அரசு செய்யும் தவறுகளையும் மக்களின் வேதனைகளையோ எடுத்துச் சொன்னால் காவல்துறை சிறைபிடிக்குமா என்றும் கேள்வி எழுப்பினர்.