பருவமழை குறைந்துவருவதால் இந்தியா முழுவதும் 256 மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் பொதுமக்கள், விவசாயிகள் மழைக்காலங்களில் மழை நீரை சேமிக்க ஜல் சக்தி அபியான் எனப்படும் நீர்வள மேலாண்மை திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
அதன்படி அந்தந்த மாவட்டங்களில் மழைநீர் சேமிப்பு, பாரம்பரிய நீர்நிலைகளை புதுப்பித்தல், நீர்வழி பகுதிகளை மேம்பாடு செய்வது போன்ற நீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம், வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் விளைநிலங்களில் விவசாயிகள் மழை நீரை சேமிப்பது குறித்த பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டார்.
மேலும் கல்லூரி மாணவர்கள் மழைநீர் சேகரிப்பு குறித்த ஓவியங்களை அந்நிகழ்ச்சியில் காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து நீர் நுட்ப மைய வல்லுனர்கள், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர்கள் கலந்துகொண்டு மழைக்காலங்களில் விளைநிலங்களில் வரப்புகள் அமைப்பது, பண்ணைக் குட்டைகளை உருவாக்குவது ஆணிவேர் கொண்ட மரங்களை விளைநிலங்களில் ஊடுபயிராக வளர்ப்பது, மழை நீர் சேமிப்பது குறித்து கூட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், ’வரும் 25ஆம் தேதி திருவனந்தபுரத்தில் தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்கள் சந்தித்து இரு மாநில நீர் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும், இந்தப் பேச்சுவார்த்தையில் ஆனைமலையாறு நல்லாறு திட்டம், சிறுவாணி அணை நீர் பிரச்னை, பாண்டியாறு புன்னம்புழா ஆகிய இரு மாநில நீர் பிரச்னைகளை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
விழாவில் சிறந்த நீர் சேமிப்பு விவசாயிகளுக்கு நினைவு பரிசுகளும், மழைநீர் சேகரிப்பு குறித்து ஓவியம், பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் ஜெயராமன் வழங்கினார். மேலும் விவசாயிகளுக்கு இடுபொருட்கள், வேளாண் கருவிகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள், கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.