கோவை அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு பிரிவில் மருத்துவராக கஜேந்திரன் என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கஜேந்திரனை அவசர சிகிச்சை பிரிவிற்கு, மருத்துவமனை முதல்வர் அசோகன் மாற்றினார். மீண்டும் தன்னை எலும்பு முறிவு பிரிவிற்கு மாற்ற வேண்டுமென கஜேந்திரன், முதல்வர் அசோகனிடம் விண்ணப்பித்துள்ளார். அப்போது அதை நிராகரித்த அசோகன் கஜேந்திரனை தகாத வார்த்தைகளில் பேசி இழிவுபடுத்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் இதுதொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் கஜேந்திரன் புகார் அளித்தார். இதன் பேரில் இன்று கோவை அரசினர் விருந்தினர் மாளிகையில் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் அசோகன், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தினார். இதையடுத்து இவ்வழக்கின் மீதான விசாரணையை ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் கஜேந்திரன், முதல்வர் அசோகன் என்னை இழிவுபடுத்தியதோடு, பழி வாங்கும் நோக்கில் செயல்படுகிறார். நான் பணிக்கு முறையாக வரவில்லை என பொய்யாக புகாரளித்து எனது வருகை பதிவையும் அழித்து உள்ளார். அசோகனின் பழிவாங்கும் நடவடிக்கையால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலை இல்லாமல் தவித்து வருவதாகவும், அசோகனின் அழுத்தம் காரணமாக பல மருத்துவர்கள் பணியில் இருந்து விலகி சென்றுள்ளதாகவும் கஜேந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து முதல்வர் அசோகனிடம் கேட்டபோது, இது மருத்துவமனை நிர்வாகம் தொடர்பான விஷயம் என்பதால் தன்னால் பதிலளிக்க முடியாது என்று தெரிவித்தார்.