தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், கோவை ஆலாந்துறை அடுத்த காளி மங்கலம் பகுதியில் 500 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வனப்பகுதியை ஒட்டி அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கு காரிமங்கலம் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, வெள்ளியங்கிரி மலைவாழ் மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் லோகநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் கட்டடங்கள் கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என வழக்குத் தொடுத்துள்ளார். ஏற்கனவே வனப் பகுதியை ஆக்கிரமித்து கட்டுமானங்கள் அதிக அளவில் கட்டி வருவதால், யானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விலை பயிர்களையும் வீடுகளையும் நாசம் செய்கின்றன. எனவே அங்கு வீடுகள் கட்டக் கூடாது என அம்மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணையில், வனத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு வனத்துறை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில் பல்வேறு நிபந்தனைகளுடன் வீடுகள் கட்ட அனுமதி அளித்துள்ளதாகவும், தற்போது கட்டப்படும் குடியிருப்புகளைச் சுற்றிலும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். வன எல்லையில் அமைக்க வேண்டும். வன விலங்குகளின் நடமாட்டத்தைத் தெரிந்துகொள்ளக் கண்காணிப்புப் படக்கருவிகள் வசதி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை உபகரணங்கள் பொருத்தப்பட வேண்டும்.
யானைகள் வந்தால் அதுகுறித்து வனத்துறையினருக்குத் தெரிவிக்க வேண்டும் பொதுமக்கள் யானையை விரட்டக் கூடாது, யானை உள்ளிட்ட வனவிலங்குகளால் கட்டடங்கள் சேதம் அடைந்தாலோ, மனித உயிர்ப் பலிகள் ஏற்பட்டாலும், அதற்கு வனத்துறை பொறுப்பு ஏற்காது. பாதிக்கப்பட்ட மக்கள் வனத்துறையினரிடம் இழப்பீடு ஏதும் கேட்கக் கூடாது எனவும், வனவிலங்குகள் நடமாட்டத்தைத் தடுக்கும் விதமான தடைகளை ஏற்படுத்தக் கூடாது, இயற்கையான நீரோடைகளைத் தடுக்கக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளதாக, அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே தற்போது கட்டப்பட்டுவரும் குடியிருப்புகள் அப்பகுதியில் உள்ள மிகப்பெரிய நீரோடை ஆக்கிரமித்து கட்டிவருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வனத்துறை அளித்த நிபந்தனையை மீறி குடிசை மாற்று வாரியம் நீரோடையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி வருவதால் பிற்காலத்தில் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், உடனடியாக கட்டடம் கட்டும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், அதிகளவில் கழிவுகள் சேர்ந்தால் அதைச் சாப்பிடும் வன விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சூழலியல் ஆர்வலர்கள் கூறுகையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வனத்தை ஆக்கிரமித்து கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் சூழலில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வன எல்லையில் கட்டடங்கள் கட்டுவது மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கும் எனவும், விதிமுறைகளைத் தளர்த்தி இந்தக் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது என்கின்றனர். மேலும் இதுகுறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தடை ஆணை வாங்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.