கோயம்புத்தூர்: இந்து முன்னணி மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "விநாயகர் சதுர்த்தி தமிழ்நாடு முழுவதும் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கடந்த ஆண்டு கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. அதே போன்று இந்த ஆண்டும் மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் இடங்களில் சிலைகள் வைத்து கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி நடத்த அரசு ஒத்துழைக்க வேண்டும். இந்துக்களுக்கு இந்த அரசு விரோதியல்ல என்பது உண்மை என்றால் விநாயகர் சதுர்த்தி நடந்த அனுமதி வழங்க வேண்டும். ஒரு சில அலுவலர்கள் தவறாக முதலமைச்சரை வழி நடத்துகின்றனர்.
அரசின் அனுமதியோடு பிற பண்டிகைகள் நடப்பதை போல இதற்கும் அனுமதிக்க வேண்டும். அதே சமயம் விநாயகர் சிலைகள் வைக்க அரசின் அனுமதி தேவையில்லை.
பாஜக பிரமுகர் கே.டி.ராகவன் விவகாரத்தில் காணொலி வெளியிட்ட மதன் சரியில்லாத நபர். பல ஊர்களுக்கு அந்த பெண்ணை கூட்டிக்கொண்டே சுற்றியுள்ளார். அந்த பெண்ணிற்கும், மதனுக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும்.
சீமான், திருமாவளவன் போன்ற தலைவர்கள் மீதும் பெண்கள் புகார் கொடுத்திருக்கின்றனர். இந்த விவகாரத்தை சட்டரீதியாக கே.டி. ராகவன் நிரூபணம் செய்ய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
விளம்பரத்திற்காக கோயில் நிலங்களை மீட்பதாக இந்த அரசு சொல்கின்றனர். யாரிடம் இருந்து நிலம் மீட்கப்பட்டுள்ளது என்பதை இந்த அரசு வெளியிட வேண்டும்" எனத் தெரிவித்தார்.