கோவை போத்தனூர் பகுதி சாரதா மில் சாலை சங்கம் வீதியில் இந்து முன்னணி உக்கடம் நகரத் துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் ஏப்ரல் 10ஆம் தேதி தாக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். இது குறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ள நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் திரண்டனர். இதனால் அப்பகுதியில் காவல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்று அவரை நலம் விசாரித்துவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
அங்கு திரண்டிருந்தவர்களிடம் பேசிவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கொலைசெய்ய வேண்டும் என்ற முயற்சியில் அவர் தாக்கப்பட்டிருக்கின்றார். இந்தச் சம்பவம் தொடர்கதையாக உள்ளது.
உத்தரப் பிரதேச முதலமைச்சர் கோவைக்கு வரும்போது தேர்தல் அலுவலர்கள், காவல் துறையினரிடம் அனுமதி பெறவில்லை என்றாலும் உளவுத் துறை அந்தக் கலவரத்தைத் தடுத்திருக்க வேண்டும்.
உத்தரப் பிரதேச முதலமைச்சர் வருகையின்போது நடந்த கலவரத்திற்கு காணொலி ஆதாரம் உள்ளது. அவர் வருகையின்போது உளவுத் துறை சரியாகச் செயல்படவில்லை. தமிழ்நாடு முழுவதும் சீனா, பாகிஸ்தான், கிறிஸ்தவ நாடுகளின் சதியால் கலவரங்களை ஏற்படுத்த முயற்சி நடைபெற்றுவருகிறது.
கொடைக்கானல் பழனியில் இஸ்லாமிய மக்கள் வசிக்கும் பகுதியில் வேட்பாளரை உள்ளே விடாமல் துரத்தியதும் அரவக்குறிச்சிப் பகுதியில் பாஜக வேட்பாளரை அனுமதிக்க மாட்டோம் என்று சில இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்ததும் கலவரத்தை ஏற்படுத்த நினைப்பதாக உள்ளது" என்று தெரிவித்தார்.