கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஊழியர்கள் நேர விவகாரம் தொடர்பாக அரசு பேருந்து ஊழியர் கார்த்திக் என்பவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. எனவே, தனியார் பேருந்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீரென நகர பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்தி இன்று (மே 10) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 30க்கும் மேற்பட்ட பேருந்துகள் காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு நிறுத்தி வைத்து சுமார் 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதியுற்றனர். இதனையடுத்து அங்கு சென்ற காட்டூர் போலீசார் அரசு பேருந்து ஊழியர்களிடம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்வதாகவும் ஆர்டிஓ தலைமையில் தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், மோதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததனர்.
இதனைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனிடையே அப்பகுதியில் சிறிது நேரம் மழை பெய்ததாலும். திடீர் போராட்டம் காரணமாகவும் பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.
இதையும் படிங்க: முண்டாசு கவிஞரின் பேத்தி முதலமைச்சருக்கு கோரிக்கை