கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை, செம்மேடு அருகே சந்தனக் கட்டை கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் செம்மேடு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, காருக்குள் சந்தன மர கட்டைகள் பதுக்கி கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, வனத்துறையினர் கார் மற்றும் சந்தனக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காரில் வந்த நான்கு பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜெயபால், காளிமுத்து, வெங்கடேஷ், தினேஷ் ஆகிய நான்கு பேரும் பொள்ளாச்சி அருகே உள்ள பண்ணை வீட்டிலிருந்த சந்தன மரத்தை வெட்டி கடத்தி கொண்டு வந்ததை ஒப்புக் கொண்டனர்.
அதையடுத்து, நான்கு பேரையும் கைது செய்த வனத்துறையினர், அவர்களிடமிருந்து ஐந்து கிலோ சந்தனக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும், சந்தனக்கட்டை கடத்தியதற்காக, 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கன்னூரில் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்