கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வால்பாறை டாப்சிலிப் பகுதிகளுக்கு தமிழ்நாடு பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
கரோனா தொற்று காரணமாக தற்போது டாப்சிலிப் பகுதிக்கு மட்டும் வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர். வால்பாறைக்கு இ-பாஸ் முறையில் செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதனால் நாள்தோறும் கார், இரு சக்கர வாகனங்களில் ஆயிரக்கணக்கானோர் படையெடுத்து இயற்கை காட்சிகளை ரசித்து வருகின்றனர்.
அவர்கள் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி செல்லக்கூடாது, வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது, மது அருந்துதல் புகைப்பிடித்தல் கூடாது, எளிதில் தீப் பற்றக்கூடிய பொருள்கள் மற்றும் பிளாஸ்டிக் உபயோகம் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ட்ரோன் கேமரா மூலம் படம் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளதை விளக்கி ஆழியார் வன சோதனை சாவடியில் வனத்துறையினர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி வருகின்றனர். மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் பாதுகாப்புடன் பயணம் செய்ய வனத்துறையினர் அறிவுறுத்தி செல்ல அனுமதிக்கின்றனர்.