மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம், சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களின் விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாவட்டம் போகம்பட்டியில் காவல்துறை பாதுகாப்புடன் பவர் கிரேட் நிறுவன அலுவலர்கள், நில அளவீடு பணிகளை மேற்கொண்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், அந்நிறுவன அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். மேலும் அவ்வழியாக வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்திலும் ஈடுப்பட்டனர். இதற்கிடையில் விவசாயிகளின் அனைத்து எதிர்ப்பையும் மீறி காவல்துறையினர் பாதுகாப்போடு விளை நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,"உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கும் திட்டத்தினால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை அரசு வழங்குவதில்லை, எங்களை பொருத்தவரை விளை நிலங்கள் வழியாக உயரமான கோபுரங்கள் அமைப்பதை விட, அதற்கு பதிலாக புதை வழித்தடங்கள் வழியாக இதனை செயல்படுத்தலாம்" என்று கோரிக்கை வைத்துள்ளனர்.