கோயம்புத்தூர்: மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான மருதமலை, தடாகம், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் பகுதியில் தற்போது யானைகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.
யானைகளின் வலசை காலம் என்பதால் கேரள வனப்பகுதியிலிருந்து வந்த ஏராளமான யானைகள் மருதமலை, தடாகம் பகுதியில் முகாமிட்டுள்ளது. இந்த யானைகள் உணவு, நீர் தேவைக்காக இரவு நேரங்களில் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து வருகிறது.
கடந்த சில நாள்களாக மருதமலை பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்த நிலையில் நேற்று (நவம்பர் 24) இரவு 7 யானைகள் கொண்ட கூட்டம் வடவள்ளியை அடுத்த காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் புகுந்தது. இன்று (நவம்பர் 25) அதிகாலை அங்குள்ள ஆரம்ப சுகாதார மையத்தின் சுற்றுச்சுவரை உடைத்து உள்ளே சென்ற யானைகள் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தது.
அங்கு தனம் என்பவரது வீட்டை சூழ்ந்த 7 யானைகள் வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த ரேசன் அரிசியை சாப்பிடத் தொடங்கின. அப்போது வீட்டினுள் இருந்த தனம், அவரது பேரக்குழந்தைகள் பயத்தில் அலறியுள்ளனர்.
இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் வனத் துறையினருக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து அங்கு வந்த வனத் துறையினர் பட்டாசு வெடித்தும், ஒலி எழுப்பியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதைத்தொடர்ந்து வீட்டினுள் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியே வந்தனர்.
இது குறித்து வனத் துறையினர் கூறுகையில், ரேசன் அரிசியின் வாசனை அறிந்து யானைகள் வீட்டை இடித்து அரிசியைச் சாப்பிட்டுள்ளன எனவும், வனப்பகுதியை ஒட்டி வசிப்பவர்கள் அளவுக்கு அதிகமான ரேசன் அரிசிகளை வீட்டில் வைக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: கோவை அருகே தெருக்களில் உலாவிய காட்டு யானைகள் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!