கோயம்புத்தூர்: கோவை மருதமலை வனப்பகுதியில் தற்போது 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. யானைகளின் வலசை காலம் தொடங்கியதை அடுத்து கேரளா வனப்பகுதியில் இருந்து தமிழ்நாடு வனப்பகுதிகளான போளுவாம்பட்டி, மருதமலை, ஆனைகட்டி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
இந்த யானைகள் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த வருவது வாடிக்கையாகிவிட்டது.
ஷட்டரை உடைத்த யானை
அண்மையில், பண்ணிமடை பகுதியில் புகுந்த காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்திய நிலையில், நேற்று முன்தினம் (டிசம்பர் 19) இரவு மருதமலை சட்டக் கல்லூரி அருகே உள்ள ஐஓபி காலனிக்குள் புகுந்தது.
குடியிருப்புக்குள் புகுந்த இந்த யானைகள் ஆறுமுகம் என்பவரது அரிசி கடையின் ஷட்டரை உடைத்து அதிலிருந்த அரிசி மூட்டைகளை வெளியே எடுத்துப்போட்டு சாப்பிட்டது. பின்னர் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று தள்ளு வண்டிகளை சேதப்படுத்தி அதிலிருந்த பழங்களை சாப்பிட்டது.
யானைகள் விரட்டியடிப்பு
இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் சைரன் ஒலி எழுப்பி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்னர் சேதமடைந்த பகுதியை பார்வையிட்டு அதற்கான நிவாரண உதவிகளை வழங்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் குடியிருப்போர் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வரும்போது விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: வைரல் வீடியோ : தாய் குரங்கின் பாசப்போராட்டம்!