கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள ஊர்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது காட்டு யானைகள் வருவது வழக்கம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு தேடி ஊருக்குள் வந்த ஒற்றை யானை, பன்னிமடை கிராமத்தில் கணேசன் என்பவரைத் தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் திங்கட்கிழமை இரவு கோவை தொப்பம்பட்டி கிராமத்தில் உள்ள கணேஷ் கார்டன் என்ற இடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை ஊழியர் பிரேம் கார்த்தி என்பவர் தன் நண்பருடன் வெட்டவெளியில் மது அருந்திக் கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென வந்த காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அவரது நண்பர் காட்டு யானையிடம் இருந்து தப்பி பெரியநாயக்கன்பாளையம் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர், காட்டுயானையைப் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டி பிரேம் கார்த்தி உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், உடனடியாக இந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், தற்போது வந்துள்ள இந்த ஒற்றை யானை மிகப்பெரிய யானை என்றும் இதுபோன்ற யானையை அப்பகுதியில் இதுவரை பார்த்தது இல்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.