கோவை: சுகுணாபுரத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீடு உட்பட அவரது சகோதரர் மற்றும் தொழில் பங்குதாரர்களின் வீடுகள், அலுவலகங்கள் எனக் கோவையில் மட்டும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் (மார்ச் 15) இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தினர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சோதனையின்போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மூலம் 3928 விழுக்காடு அளவிற்கு வருமானம் அதிகரித்துள்ளதாகவும், சுமார் ரூ. 54 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தது குறித்தும், வெளிநாடு சுற்றுப்பயணங்களின்போது, மேற்கொண்ட முதலீடுகள் குறித்தும் ஆவணங்களைச் சேகரிப்பதற்கான சோதனைகளும் நடைபெற்றன.
கிரிப்டோகரன்சியிலும் முதலீடா?
இதனால், சுமார் 13 மணி நேரத்துக்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தது உட்பட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேபோல் சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயராம் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது. அவரது வீட்டிலிருந்து ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
முக்கிய ஆவணங்கள்
இதேபோல் எஸ்.பி. வேலுமணியின் தொழில் பங்குதாரர்களாக இருந்த சந்திரபிரகாஷ், சந்திரசேகர் மற்றும் அவரது சகோதரர் அன்பரசன் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையிலும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் 59 இடங்களில் நடைபெற்ற சோதனையில் தங்கம், வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
முடிவுற்ற சோதனை
இதேபோல் கோவையை அடுத்த ஆனைகட்டியில் உள்ள சொகுசு பங்களாவில் சோதனையானது நடைபெற்று முடிவடைந்தது. சுமார் 13 மணித்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் தொடர்ந்து சோதனை நடத்திய நிலையில், இன்னும் பல்வேறு புதிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: AK62 அப்டேட்: விக்னேஷ் சிவனுடன் கைகோர்க்கும் அஜித்?