சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், அதன் தொடர்ச்சியாக அமலுக்கு வந்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு, கூடுதல் படுக்கை வசதிகள், தட்டுப்பாடில்லா ஆக்சிஜன் விநியோகம் என தமிழ்நாடு அரசு மேற்கொண்ட விரைவான அதிரடி நடவடிக்கைகளால் கரோனா தொற்று பாதிப்பு தலைநகரில் குறைய தொடங்கி இருக்கிறது.
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை கவனிப்பதற்கு என்று தங்கி இருந்த நோயாளிகளின் உறவினர்கள் தங்கள் வீடுகளுக்கும், மருத்துவமனையின் கரோனா பிரிவிற்கும் மாறி மாறி சென்று வந்த நிலையில், அவர்களை கரோனா அறைக்குள் நுழைய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொற்று பரவலை தடுக்க முக்கிய காரணமாக அமைந்தது.
தொற்றிலிருந்து மீழும் சென்னை
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கை வசதிகளை கூடுதலாக உருவாக்கி அடுத்தடுத்த நாட்களில் அந்ததந்த கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை நோயாளிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அவற்றில் கரோனா நோயாளிகளை அவர்களது நோயின் தீவிரத்துக்கு ஏற்ப வகைப்படுத்தி சிகிச்சை அளிப்பதும் சென்னையில் நோய் பரவலை தடுத்து, குணமடைவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது.
இதனால், தற்போது சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுக்கு தட்டுபாடில்லா நிலை உருவாகியுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 157 ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளன. ஸ்டான்லி மருத்துவமனையில் 28 படுக்கைகளும், ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் 13 படுக்கைகளும், கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 படுக்கைகளும், கிங் இன்ஸ்டியூட் அரசு சிறப்பு மருத்துவமனையில் 4 ஆக்சிஜன் படுக்கைகளும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை டூ கோயம்புத்தூர்
ஆனால், சென்னையை விட சிறிய நகரான கோயம்புத்தூர் நாளுக்கு நாள் கரோனாவால் பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. சென்னையில் மே 27ஆம் தேதி 2,779 பேர் பாதிப்புக்குள்ளான நிலையில், கோயம்புத்தூரில் பாதிப்பு எண்ணிக்கை 4,734ஆக பதிவாகி உள்ளது. 2,074 நோயாளிகளுடன் திருப்பூர் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டிலேயே கோயம்புத்தூரில் தான் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாக கூறப்படுகின்றது.
இங்குள்ள அரசு மருத்துவமனைகளில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய ஆக்சிஜன் படுக்கை வசதிகள் இல்லாமல் நோயாளிகள் அவசர ஊர்திகளிலேயே சிகிச்சை பெறும் நிலை தொடர்கிறது.
ஆரம்பத்தில் 333 ஆக இருந்த ஆக்சிஜன் படுக்கைகளை 900ஆக உயர்த்திய பின்னரும் ஆக்சிஜன் படுக்கை தட்டுப்பாடு நீடித்து வருகின்றது. இங்கு கரோனா பரவல் அதிகரிக்க முக்கிய காரணம் அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு உதவி செய்வதாக கூறி தங்கியிருந்து அவ்வபோது வீட்டுக்கு சென்று வரும் நோயாளிகளின் உறவினர்கள், அதீத நோய்ப் பரப்பிகளாக வலம் வருவதாக மருத்துவர்கள வேதனை தெரிவிக்கின்றனர்.
நோய்ப் பரப்பிகளாக மாறியிருக்கும் அலட்சியவாதிகள்
இது ஒரு தொற்று நோய் என்பதை அறியாமல், எந்த ஒரு கட்டுப்பாடுக்கும் அடங்காமல், அலட்சியமாக ஒவ்வொரு கரோனா நோயாளியையும் குறைந்த பட்சம் 5 பேராவது பார்த்துச் செல்வதாகவும், இவர்கள் மூலம் கரோனா எளிதாக பரவுவதாக சுட்டிகாட்டுகின்றார் கோயம்பத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா.
கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு எதிரே அமைந்துள்ள டீக்கடையில் முண்டியடிக்கும் கூட்டமும் கரோனா பரவுவதற்கு முக்கிய காரணமாக விளங்குவதாகவும், பலமுறை எச்சரித்தும் யாரும் கேட்பதில்லை என்றும் வேதனை தெரிவித்தார்.
திருப்பூரில் மாஸ்க் மற்றும் பிபிஇ கிட் தடுப்பு உடைகள் தயாரிப்பதற்கு மட்டும் 250 நிறுவனங்களுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பனியன் நிறுவனங்கள் அதிகமாக உள்ள திருப்பூரின் 2 மண்டலங்களிலும் நூல் மில்கள், விசைத்தறிகூடங்கள் மற்றும் கோழிப்பண்ணைகள் அதிகமாக உள்ள பல்லடத்திலும் தினமும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது.
சென்னையை போல உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி விழிப்புணர்வுடன் பொதுமக்கள் பொறுமை காத்து வீட்டில் இருந்தாலே இந்த பெருந்தொற்றை விரட்டிவிடலாம் என்பது மருத்துவ வல்லுநர்களின் கருத்தாக அமைகிறது.