கோவை அருகே பேரூர் நொய்யல் படித்துறை மற்றும் மேட்டுப்பாளையம் பவானி ஆற்று படித்துறைப் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது வழக்கம். அதன்படி, இன்று (ஆக.3) பேரூர் பட்டீஸ்வரர் கோயில் அருகே உள்ள நொய்யல் ஆற்றில், பல பகுதிகளிலிருந்தும் வந்த மக்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, பேரூரில் திதி கொடுக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பேரூரில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் முன்னோர் வழிபாடு மேற்கொண்டனர்.
நொய்யல் ஆற்றின் படித்துறையில் ஏராளமான புதுமணப்பெண்கள், புதுத்தாலி கயிறு மாற்றிக்கொண்டனர். பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. விழாவில் சுவாமி - பச்சை நாயகி அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதற்காக, காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக முன்னோர் வழிபாடு செய்ய வந்தவர்களிடம் சிவாச்சாரியார்கள் பூஜை செய்ய அதிக பணம் கேட்டதாகவும்; வாகன நிறுத்தும் இடத்திற்கு அதிக கட்டணம் வசூலித்ததாகவும் புகார் எழுந்தது.
இதையும் படிங்க: மின்னல் தாக்கியதில் பற்றி எரிந்த தென்னை மரம்...!