தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலை தொடர்ந்து வரும் நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக கோவையில் துணிக் கடைகள், நகைக் கடைகள், அழகு நிலையங்கள் போன்றவை இயங்குவதற்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்துள்ளது.
மேலும், கோவை மாவட்டம் தொற்று எண்ணிக்கையில் மாநிலத்தில் முதலிடம் வகித்து வரும் நிலையில், கோவையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
காவல் துறையினர், மாநகராட்சி அலுவலர்கள் தொடர்ந்து ரோந்துப் பணிகளை மேற்கொண்டு அனுமதியின்றி செயல்படும் கடைகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில், காந்தி பார்க் பகுதியில் செயல்பட்டு வரும் ‘கிரீன் டே ஸ்பா’ எனப்படும் அழகு நிலையம், விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்ததாக மாநகராட்சி அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இத்தகவலை அடுத்து அங்கு சென்ற மாநகராட்சி அலுவலர்கள் அந்த அழகு நிலையத்திற்கு சீல் வைத்து, அந்நிறுவனத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும் விதிமுறைகளை மீறி கடைகள் செயல்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.