கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் மற்றும் வணிகத் துறை ஆணையருமான சித்திக் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவை மாவட்டத்தில் சராசரியாக 200 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். கோவையில் 43 விழுக்காடு மக்களுக்கு எதிர்ப்புச் சக்தி இருக்கிறது. சென்னையில் எதிர்ப்புச் சக்தி 78 விழுக்காடாக இருக்கிறது.
மாவட்டத்தில் மூன்றாவது அலையால் பாதிக்க வாய்ப்புகள் உண்டு. அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். ஒரு மாத காலத்திற்குள் மூன்றாவது அலை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். தேவைகளற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். முழு ஊரடங்கு வராமல் இருப்பது மக்கள் கையில்தான் உள்ளது.
மூன்றாவது அலை கரோனா பாதுகாப்பு
தளர்வுகளுடன் ஊரடங்கு இருப்பது முழு ஊரடங்கை தவிர்க்க உதவும். எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்க தடுப்பூசி மிகவும் முக்கியம். கோவை மாவட்டத்திற்கு தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ஆக்சிஜன் படுக்கை, வென்டிலேட்டர் வசதிகளும் உள்ளன.
ஆக்சிஜன் டேங்க் சென்னையிலிருந்து கோவைக்கு மாற்றப்படும். அதிக உயிரிழப்புகள் இல்லாமல் மூன்றாவது அலையை எதிர்கொள்ள முடியும். அதற்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இம்முறை குழந்தைகளுக்கு பாதிப்பு வந்தால் அதனை எதிர்கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு 124 ஆக்சிஜன் படுக்கைகளும், 82 ஐசியு படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. இஎஸ்ஐ மருத்துவமனையில் 40 ஆக்சிஜன் படுக்கைகளும், 30 ஐசியு படுக்கைகளும் குழந்தைகளுக்காகத் தயாராக உள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று 1,929 பேருக்கு கரோனா பாதிப்பு