கோவை மாவட்டம், பொள்ளாச்சி, தெற்குஜமீன்கோட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பக்கோதிபாளையம் கிராமத்தில் சென்னையிலிருந்து கடந்த 10 தினங்களுக்கு முன்பாக 25 வயது கொண்ட இளைஞர், இரண்டு பெண்கள் கரோனா தொற்று உள்ளதாக அறிந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். உடனடியாக, சம்பந்தப்பட்ட ஊராட்சிப்பகுதிக்கு கிருமிநாசினி தெளித்தும்; அந்தப் பகுதியை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதையடுத்து கிணத்துக்கடவு அடுத்த வடசித்தூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர் நேற்று (ஜூன் 20) தனது காரில், மஸ்கட்டில் இருந்து கேரளா வந்துள்ள நண்பரை அழைத்து வருவதற்காக கோவை வாளையார் சோதனைச் சாவடி மையத்துக்குச் சென்றுள்ளார்.
பின்னர் தனது நண்பரை அழைத்துக்கொண்டு கரோனா தொற்று பரிசோதனை செய்வதற்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு கரோனா இல்லை என முடிவு வந்துள்ளது. அதிமுக பிரமுகருக்கு சோதனை செய்ததில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அவர் அங்குள்ள கரோனா சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கிணத்துக்கடவு அருகே வடசித்தூரில் உள்ள அவரது வீடு, அவருக்குச் சொந்தமான பெட்ரோல் நிரப்பும் நிலையம், திருமணமண்டபம் ஆகியவைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் அவரது வீட்டில் உள்ள ஒன்பது நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, சோதனை செய்யப்பட்டு வருகிறார்கள். பொள்ளாச்சியில் மட்டும் இதுவரை 34 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு 26 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பி உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் எட்டு பேருக்கு தொற்று ஏற்பட்டு இ.எஸ்.ஐ-யில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.