கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் கடவுள் படங்களுடன் நடிகர் சிவக்குமாரின் படமும் வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி முதல்வர் குமார், "பள்ளி திறப்பதற்கு வசதியாக வகுப்பறைகள், அலுவலகம் போன்றவை சுத்தம் செய்யப்பட்டு சுண்ணாம்பு அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணியில் ஈடுபட்டவர்கள் தவறுதலாக நடிகர் சிவகுமாரின் படத்தையும் சேர்த்து மாட்டிவிட்டனர். உடனடியாக அது சரி செய்யப்பட்டது. அது நடிகர் சிவகுமாரின் புகைப்படம் அல்ல, மாணவர் ஒருவர் வரைந்த ஓவியம்" என்றார்.
சர்ச்சைகள் எழுந்ததை அடுத்து சிவக்குமாரின் புகைப்படம் அகற்றப்பட்டு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி, அப்துல் கலாம், மகாத்மா காந்தி ஆகியோரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. நடிகர் சிவக்குமார் சூலூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதும், முன்னாள் மாணவர் சங்க தலைவராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.