கோவை ரயில் நிலையம் பகுதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கரோனாவால் இந்தியாவில் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதோ அதேபோல் தான் தமிழ்நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக தொழிற்சாலைகள் இயங்காததால் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க இயலவில்லை. இந்நிலையில், அரசின் உதவி தொழிற்துறையினருக்கு கிடைக்கவில்லை.
இதுபோன்ற ஒரு பேரிடர் காலத்தில் தொழிலாளர்களை காப்பாற்ற அரசு ஒரு திட்டம் வகுக்க வேண்டும். பல கோடி ரூபாய் தொழிலாளர்களுக்கு பிரதமர் அறிவித்திருக்கிறார் என்ற நிலையிலும் சிறு, குறு தொழில் துறையினருக்கு எவ்வித பணமும் வந்துசேரவில்லை.
தொழில் நிறுவனங்களின் இந்த ஆறு மாத காலத்திற்கான வட்டியை ரத்து செய்தால்தான், தொழில் துறை மீண்டும் நல்ல முறையில் தொடங்கும். வட்டி தள்ளுபடியை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அந்த மாநிலத்தில் ஐந்து தலைநகர்களை அறிவித்திருக்கும்போது, தமிழ்நாட்டில் ஆறு, ஏழு தலைநகர் இருப்பதில் தவறில்லை. கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை பார்க்கும்போது தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் தோல்விடைந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது" என்றார்.
இதையும் படிங்க: காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு: புதுமணத் தம்பதி காவல் நிலையத்தில் தஞ்சம்!