மூன்று பக்கங்களும் மலைகளால் சூழப்பட்டு, முகிலும் மூங்கிலும் கொஞ்சி விளையாடும் மலையாடிவாரத்தில், யானை, புலி, சிறுத்தை, கரடி என பல வன விலங்குகள் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர் கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்த உளியூர் கிராம பழங்குடியின மக்கள்.
அங்கு சென்றால் தார்ப்பாய் போர்த்திய வீடுகள் நம்மை வரவேற்கின்றன. அங்கும் இங்குமாக மகிழ்ச்சியாக சுற்றித்திரியும் குழந்தைகள், தலையில் விறகு சுமையுடன் செல்லும் 80 வயது மூதாட்டி என இந்தக் காட்சிகள் அனைத்தும் ஏதாவது ஒரு திரைப்படத்தை நினைவிற்கு கொண்டு வரும். மேலும் அதே கிராமத்தில்தான் வீடுகள் இடிந்து சிதிலமடைந்த வீட்டில் பல வருடங்களாக அவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களை அரசும் மக்கள் பிரதிநிதிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறது.
ஆம், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு உளியூர் மலை கிராமத்தில் அன்றைய முதல்வர் காமராஜர் ஆட்சியில் பழங்குடியின மக்களுக்கு 20 தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. காலப்போக்கில் மழை உள்ளிட்ட காரணங்களால் தற்போது அந்த வீடுகள் அனைத்தும் இடிந்து விழுந்துள்ளது. இந்த சூழலிலும் ஓலைகளையும் தார்ப்பாய் கொண்டும் வீட்டை மூடி அதில் வசித்து வருகின்றனர்.
இது குறித்து பழங்குடியின மக்கள் கூறுகையில், “காமராஜர் ஆட்சியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. இவை அனைத்தும் மழை, உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டு இடிந்துள்ளது. இது குறித்து பல முறை மனு கொடுத்தும் அரசியல் பிரமுகர்களிடம் தெரிவித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஓட்டு கேட்பதற்கு மட்டும் வருகின்றனர். வெற்றி பெற்ற பிறகு யாரும் கண்டுகொள்வதில்லை” என்கின்றனர்.
மேலும், இதுகுறித்து பழங்குடியின பெண் பொன்னம்மா கூறுகையில், “இங்குள்ள பழங்குடியினர் கூலி வேலைக்கு சென்று வருவதால் வீடு கட்டுவதற்கு தேவையான பணம் தங்களிடம் இல்லை. அதனால், அரசு உதவி செய்து வீடு கட்டித்தர வேண்டும். முதலில் யானை தொந்தரவு இல்லாத நிலையில், தற்போது யானை தொந்தரவு அதிகமாக உள்ளது. எனவே, தங்களுக்கு வீடு கட்டி கொடுத்தால் உதவியாக இருக்கும்.
அதுமட்டுமின்றி, தற்போதுதான் ஒரு சில வீடுகளுக்கு சோலார் மின் வசதி உள்ளது. பெரும்பாலான வீடுகள் பகல் நேரத்திலேயே இருட்டாகத்தான் உள்ளது. அதனால், மின் வசதியுடன் புதிய வீடுகள் கட்டி தந்தால் இங்குள்ளவர்கள், கொஞ்ச காலம் இங்கு இருக்க முடியும். இல்லை என்றால் அனைவரும் இங்கிருந்து வெளியேறும் சூழல் உள்ளது” என தெரிவித்தார்.
உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத சிதிலமடைந்த வீட்டில் வாழும் தங்களுக்கு ஏதேனும் ஆனதென்றால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வாகனங்கள் வர சரியான சாலை வசதிக்கூட இல்லையே... என வேதனை தெரிவிக்கிறார் கிராமத்துவாசி.
காமராஜர் ஆட்சியில் கட்டி கொடுக்கப்பட்ட வீடுகள் நீண்ட காலம் ஆனதால் மழையால் இடிந்துள்ளது இதனை அரசு அலுவலர்களும் அரசியல்வாதிகளும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்கிறார் கிராமவாசி ராதாகிருஷ்ணன்.
மேலும், அவர் கூறுகையில், அவசர உதவிக்காக உளியூரிலிருந்து சிறுமுகை செல்ல வேண்டும் என்பதால் சாலை வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் அவசர காலத்தில் 108 ஆம்புலன்ஸ் வர முடியாத சூழல் உள்ளது. எனவே சாலையை உடனடியாக சீரமைத்து போக்குவரத்திற்கு உதவி செய்ய வேண்டும் 50 ஆண்டுகளுக்கும் மேலான வீடுகள் எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலை உள்ளதால் விபத்து ஏற்படும் முன் தங்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அரை நூற்றாண்டாக கண்டும் காணாமல் இருக்கும் இந்த பழங்குடியின மக்களின் வாழ்வை கருத்தில் கொண்டு, பாதுகாப்பாக வாழ்வதற்கு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் ஒரு மித்த கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க....திருக்குறள் வாசிப்பில் புதிய சாதனை: இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்த 4 வயது சிறுவன்!