கோயம்புத்தூர்: நேற்றைய தினம் தடாகம் பகுதியில் மூடப்பட்டுள்ள செங்கல் சூளைகளில் சமூக ஆர்வலர்கள் நான்கு பேர் ட்ரோன் கேமரா மூலம் படம் பிடித்ததாக அவர்களுடன் செங்கல் சூளை ஆதரவாளர்கள், உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. சமூக ஆர்வலர்கள் தங்களைத் தாக்கியதாகக் கூறி செங்கல் சூளை ஆதரவாளர் ஒருவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சமூக ஆர்வலர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து சமூக ஆர்வலர்களை கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செங்கல் சூளை ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் முன்பு திரண்டனர்.
காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் அவர்கள் கலைந்துசென்றனர். இது குறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
இந்நிலையில் இன்று இருதரப்பினரும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் மீது ஒருவர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனு அளித்துள்ளனர். முதலில் வந்த செங்கல் உற்பத்தி சங்கத்தினர், தடாகம் பகுதியில் செங்கல் சூளைகள் மூடுவதற்கு காரணமாக இருந்த நபர் (கணேஷ்) உள்பட சிலர் மூடப்பட்டிருக்கும் சூளைகளுக்குள் வந்து காணொலிப் பதிவு செய்வதாகத் தெரிவித்தனர்.
இதனை வாட்ச்மேன் உள்பட மேலாளர்கள் தடுத்த நிலையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அவர்களை அழைத்துச் சென்றுவிட்டதாகக் கூறினர்.
தடைசெய்யப்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைந்தனர்
சூளைகள் குறித்தான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில் இது போன்று அவர்கள் செய்துவருவதாகவும், பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் கூறினார்கள்.
அவர்கள் இது போன்று கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படுபவர் மீது மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
மேலும் சமூக ஆர்வலர் எனக் கூறப்படுபவர் (கணேஷ்) இயற்கையைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இதனைச் செய்யவில்லை, இந்தத் தொழிலை முடக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்று செய்துவருகிறார் எனவும் தெரிவித்தனர்.
புத்தகம் எழுத தகவல் சேகரிக்கச் சென்றவர்கள்
பின்னர் வந்த சமூக ஆர்வலர்கள் கணேஷ், ரமேஷ் ஆகியோர் புத்தகம் ஒன்றை எழுதுவதற்காகவே அங்குப் படம் பிடிக்கக் சென்றதாகவும் தங்களை செங்கல் சூளையில் தாக்கியதாகவும் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: Pongal Gift Hamper: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின்