கோவை: கோவையில் 12ஆம் வகுப்பு மாணவி தொடர் பாலியல் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தனியார் பள்ளி ஆசிரியர், பள்ளியின் முன்னாள் முதல்வர் கைதுசெய்யப்பட்டனர்.
மாணவியின் மரணத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், சசிகலா, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
மாணவர்களுக்குத் தேவை விழிப்புணர்வு
இந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் மாணவியின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அன்பில் மகேஷ், "தனிப்பட்ட பெண் குழந்தை என்ற எண்ணத்தில் நாங்கள் வரவில்லை. என் சொந்த குழந்தைக்கு நேர்ந்த ஒரு துக்க நிகழ்வுபோல் இதனைப் பார்க்கிறேன்.
இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர், காவல் துறையிடம் சொல்லியிருக்கிறேன். மாணவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள வேண்டியது என்னவென்றால் அனைவருக்கும் விழிப்புணர்வு தேவை.
நிறைவடைந்தது உடற்கூராய்வு
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலம் போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுபோலவே தனியார் பள்ளிகளுக்கும் அது தேவைப்படுகிறது. அதற்கான செயல்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.
இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித் தருவது கடமை. இதுபோன்ற செயல்கள் நடக்கும்பொழுது பாதிக்கப்பட்ட மாணவர்கள் உதவி எண் 14417-க்கு அழைத்து குறைகளைப் பதிவுசெய்யலாம்" எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், மாணவியின் உடல் உடற்கூராய்வு முடிந்து நிலையில் ஆம்புலன்ஸில் வீட்டிற்கு எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து உடலுக்கு உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.
இதையும் படிங்க: கோவை மாணவி தற்கொலை: தனியார் பள்ளி முதல்வர் கைது