கோயம்புத்தூர்:கோவை மாநகராட்சிக்குட்பட்ட செல்வபுரம் 78ஆவது வார்டு பகுதியில் ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களாகப் பணியாற்றி வருபவர்கள் சுப்பிரமணி, தருமன், செந்தில்குமார் ஆகியோர்.
அங்குள்ள ஆலமரமேடு பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக வந்த புகாரையடுத்து, மூவரையும் அடைப்பை நீக்குமாறு மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராம் மற்றும் மேற்பார்வையாளர் மாணிக்கம் ஆகியோர் கூறியுள்ளனர்.
சாக்கடைக்கு உள்ளே இறங்காமல் அடைப்பை நீக்க முடியாது எனப்பணியாளர்கள் கூறிய நிலையில், மேற்பார்வையாளர் மாணிக்கம் அடைப்பை நீக்கத்தான் உங்களை பணியில் வைத்துள்ளோம், இறங்கி சுத்தம் செய்யுங்கள் என உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து சுப்பிரமணி, உரியப் பாதுகாப்பு உபகரணங்களின்றி சாக்கடைக்குள் இறங்கி தனது வெறும் கைகளால் குப்பைகளை அகற்றி, அடைப்பை நீக்கியுள்ளார். இந்தக் காட்சிகளை அங்கிருந்தவர்கள் வீடியோவாகப் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலான நிலையில் மாநகராட்சி அலுவலர்கள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:செயற்கை நுண்ணறிவில் புதிய பாடத்திட்டம் அறிமுகம்!