கோவை மாவட்டம் போத்தனூர் அடுத்த செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள சங்கமம் நகரில் வசித்துவருபவர் அப்புக்குட்டன் (59). தனியார் பள்ளியில் ஊழியராகப் பணிபுரிந்து வரும் இவர், பொங்கல் விடுமுறைக்காக குடும்பத்தோடு சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.
வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நாணயம், கம்மல் உட்பட இரண்டரை பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது.
அதேபோல் வெளியூர் சென்றிருந்த மற்ற நபர்களின் வீடுகளும் உடைக்கப்பட்டு நகை, பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அங்குள்ள பொறியாளர் ஒருவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் கொள்ளையர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து, பீரோவை உடைத்து நகையை திருடிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இதையடுத்து செட்டிப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களைத் தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று சொக்கம்புதூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மகன் ஸ்ரீ பிரசாந்த் (22) என்பவரைக் கைதுசெய்தனர். இவருக்கு துணையாக இருந்த கௌதம் (30) என்பவரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: 'யானையும் பாகனும் ஒரே இலையில்' - வைரல் வீடியோ!