கோவையில் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கிய கோவை விழா, ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பல கட்டங்களாக நாள்தோறும் பல விழாக்கள் பல இடங்களில் நடைபெற்றுவருகின்றன.
இந்த நிலையில் நேற்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் கோவையிலுள்ள பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் மாநிலத்தின் பாரம்பரியக் கலையை வெளிப்படுத்தும் விதமாக ஊர்வலம் சென்றனர். கோவையில் வாழ்ந்துவரும் கேரளா, ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் மாநிலங்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து பாரம்பரிய நடனமாடி ஊர்வலமாகச் சென்றனர்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தொடங்கிய இந்த ஊர்வலம் ரேஸ்கோர்ஸ் முழுவதும் சுற்றி வந்து மீண்டும் ரேஸ் கோர்ஸில் முடிந்தது. இதைக் காண மக்கள் பலரும் ஆர்வமுடன் வந்து, தங்கள் குடும்பங்களுடன் கண்டுகளித்தனர். தமிழ்நாட்டு மக்கள் தமிழர்களின் பாரம்பரிய இசையான பறை இசைத்தும் முளைப்பாரி எடுத்தும் ஊர்வலம் வந்தனர். இதேபோன்று கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் பாரம்பரியக் கலையான கதக்களி வேடமணிந்து ஊர்வலம் வந்தனர்.
பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் நாட்டு மன்னர்களைப் போல் உடை அணிந்தும் நாட்டு மக்கள் அணியும் பாரம்பரிய உடைகளை அணிந்தும் ஊர்வலம் வந்தனர். இதில் சில கல்லூரி மாணவர்களும் பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டனர்.