Twin throttlers என்ற யூடியூப் சேனலை கோவை காரமடையை சேர்ந்த டிடிஎப் வாசன் என்ற இளைஞர் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு சாகசங்கள் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு 2K கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்தார். இவரும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பிரபல யூட்யூபர் ஜி.பி.முத்துவும் அண்மையில் சந்தித்தனர்.
அப்போது டிடிஎப் வாசன், ஜி.பி.முத்துவை பைக்கில் அமர வைத்து அதிவேகமாக ஓட்டியுள்ளார். வாகன நெருக்கடி நிறைந்த சாலையில் 150 கி.மீ.க்கு வேகத்தில் சென்றுள்ளார். அந்த நேரத்தில் ஜி.பி.முத்து பயத்தில் கதறுகிறார். குறிப்பாக ஜி.பி.முத்து ஹெல்மெட் கூட அணிவில்லை.
இதுகுறித்த வீடியோ வெளியாக பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இப்படி சாலை விதிகளை மீறும் டிடிஎப் வாசன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்தன. அதனடிப்படையில் டிடிஎப் வாசன் மீது போத்தனூர் காவல் துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் டிடிஎப் வாசன் மீது சூலூர் காவல் நிலையத்திலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிந்தாமணிபுதூர் பகுதியில் பாலக்காடு சாலையில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதால் 3 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொது இடத்தில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், பில்லியன் ரைடர் ஹெல்மெட் அணியாதது, ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: துணை நடிகை தற்கொலை வழக்கில் மாயமான செல்போன் கண்டுபிடிப்பு