கோவை அல்அமீன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜியவுல்ஹக். இவர் கோவை மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க உக்கடம் பகுதி நிர்வாகியாக உள்ளார். இவர் நான்கு ஆண்டுகளுக்கு முன் சம்பளத்திற்கு ஆட்டோ ஓட்டிவந்த நிலையில், அதன் பின்னர் வங்கிக் கடனில் ஆட்டோ வாங்கி சொந்தமாக ஓட்டிவந்துள்ளார்.
ஆட்டோ உரிமையாளர்
அதனைத்தொடர்ந்து, மேலும் நான்கு ஆட்டோக்களை வங்கிக் கடனுதவி மூலம் வாங்கி ‘சேரன் ஆட்டோஸ்’ என்ற பெயரில் ஓட்டுநர்களை வேலைக்கு வைத்து ஆட்டோக்களை இயக்கிவந்துள்ளார். நாளடைவில் நான்கு ஆட்டோக்கள் 20 ஆட்டோக்கள் ஆகின.
இந்நிலையில், அவரது நிறுவனத்தில் சுமார் இரண்டரை ஆண்டு காலமாக சிறப்பாகப் பணியாற்றிய மக்களிடம் மதிப்பு பெற்று, இவரது நிறுவனத்தின் புகழை பெருமையடையச் செய்த பக்ருதின் என்பவருக்கு அவர் ஓட்டிவந்த ஆட்டோவையே பரிசாக அளித்து பணியாளராக இருந்த அவரை உரிமையாளர் ஆக்கியுள்ளார்.
தன்னிடம் மாத சம்பளத்திற்கு இருந்த ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையையும், கடின உழைப்பையும் பாராட்டும் வண்ணம் உழைப்பாளர் தினத்தன்று அவர் ஓட்டிக் கொண்டிருந்த ஆட்டோவையே பரிசாக அளித்து ஆட்டோவிற்கு உரிமையாளராக்கியது நெகிழ்ச்சியடையச் செய்தது.