கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் கே.ஜி.கே சாலையில் மளிகைக் கடை நடத்தி வருபவர் செல்வகுமார். இவரது மனைவி தனலட்சுமி. இருவரும் கடையை கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதன்கிழமை (அக்.20) மதியம் தனலட்சுமி மளிகைக் கடையில் இருந்தபோது சிகரெட் வாங்குவதுபோல் வந்த இளைஞர் ஒருவர் தனலட்சுமியிடம் பேச்சுக்கொடுத்தவாறு சிகரெட் வாங்கியுள்ளார்.
பின்னர், திடீரென அந்த இளைஞர் தனலட்சுமி அணிந்திருந்த ஐந்தரை சவரன் தங்கச் செயினைப் பறித்துக்கொண்டு தப்பியுள்ளார். இதனையடுத்து தனலட்சுமியின் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் செயினைப் பறித்துச்சென்ற இளைஞரை விரட்டிச் சென்றனர். ஆனால், அவர் தயாராக இருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றார்.
சிசிடிவி காடிகள் மூலம் விசாரணை
இது குறித்து உடனடியாக குனியமுத்தூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், கடையின் அருகில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், கேடிஎம் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மளிகைக் கடையில் இருந்த பெண்ணிடம் தங்கச் செயினைப் பறித்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கட்டிங்கை போட்டு சாவகாசமாகத் திருடிச் சென்ற திருடர்கள்