’சாதிகள் மட்டுமே சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் கலக்கட்டும்’ என்ற பழனி பாரதியின் கவிதை 1982இல் எழுதப்பட்டிருந்தாலும், நடப்பு காலத்திலும் சில சம்பவங்கள் இதை நினைவூட்டுகின்றன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலகத்தில் பணிபுரியும் நபரை உள்ளூர் பிரமுகரின் காலில் விழவைத்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பது சாதிய குரூரம்தான்.
அன்னூரை அடுத்த ஒட்டர்பாளையம் கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக கலைச்செல்வி என்பவர் பணியாற்றிவருகிறார். இவருக்கு உதவியாளராக அதே ஊரைச் சேர்ந்த முத்துச்சாமி பணியாற்றுகிறார்.
வாக்குவாதம்
இந்த அலுவலகத்தில் கோப்ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் தன்னுடைய சொத்து விவரங்களைச் சரிபார்ப்பதற்காக நேற்று (ஆகஸ்ட் 6) வந்தார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, ஆன்லைனில் விண்ணப்பித்துவிட்டுதான் அலுவலகத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் எரிச்சலடைந்த கோபிநாத், கிராம நிர்வாக அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து கோபிநாத் சத்தம் போட்டு, கலைச்செல்வியை அச்சுறுத்தும்விதமாகப் பேசவே, உதவியாளர் முத்துசாமி குறுக்கிட்டு கோபிநாத்தைத் தடுத்துள்ளார்.
’ஒரு பெண் அரசு அலுவலரிடம் தவறாகப் பேச வேண்டாம்’ என முத்துச்சாமி கோபிநாத்திடம் அறிவுறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த கோபிநாத், அவரை வயது வித்தியாசம் பார்க்காமல் திட்டி எச்சரித்துள்ளார்.
காலில் விழவைத்த சம்பவம்
'ஊரில் இருக்க முடியாது முத்துச்சாமி, வேலையைவிட்டுத் தூக்கிவிடுவேன்' என மிரட்டல் தொனியில் கோபிநாத் பேசவே, பட்டியலினத்தைச் சேர்ந்த முத்துச்சாமி நடுநடுங்கிப்போனார். அந்த அலுவலகத்திலேயே கோபிநாத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதனை அங்கு வந்த ஒருவர் செல்போனில் பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்தக் காணொலி அதிகம் பகிரப்பட்டுவருகின்றது. அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரை அலுவலகத்திலேயே காலில் விழவைத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாதிய, ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இருக்கும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் மேலும் கவலையளிக்கின்றன.
சாதிய வன்மத்தோடுதான் இந்தச் சம்பவம் அரங்கேறியதா என கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வியிடம் கேட்டபோது, ’’இது சாதிரீதியான பிரச்சினை இல்லை. கோபிநாத் என்பவர் நேற்றுதான் முதன் முதலாக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்தார்.
அலுவலக நடைமுறைகள் தெரியாமல் கோபிநாத் சத்தம் போட்டபோது அப்படி செய்யக்கூடாது என உதவியாளர் முத்துச்சாமி எதிர்ப்புத் தெரிவித்தார்.
பயம்தான் காரணமா?
இதனால் கோபமடைந்த கோபிநாத் முத்துச்சாமியை மிரட்டினார். இதையடுத்து முத்துச்சாமி பயந்துபோய் கோபிநாத்தின் காலில் விழுந்தார். முத்துச்சாமி இது தொடர்பாக புகார் கொடுக்க போகின்றாரா என்பது எனக்குத் தெரியாது” என்றார்.
ஆனால் காணொலியில், காலில் விழும் கிராம உதவியாளர் முத்துச்சாமியை, ’மன்னித்துவிட்டேன் முத்து, உணர்ச்சிவசப்படாதே... என் மீதும் தவறு உள்ளது’ என கோபிநாத் கூறுவது பதிவாகியுள்ளது.
மனிதம் என்னும் சமத்துவத்தோடு அனைவரும் பாகுபாடின்றி வாழ்வதே எதிர்காலத் தேவையாகும். சாதியப் பார்வையை அனைவரும் துறப்பதும், மனிதர்கள் அனைவரும் தன் சமூகமே என்னும் பார்வையை ஏற்பதும் அவசியம்.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்- சாதி வெறியர்களின் கொண்டாட்டம் அநாகரிகம்- தொல். திருமாவளவன்!